பல்வேறுபட்ட நண்பர்களுடன் சாலையில் பயணித்திருக்கிறேன். நெரிசல் மிகுந்த பாதையில் சென்று மாட்டிக்கொண்டு, போக்குவரத்து காவலர்களையும், அரசாங்கத்தையும் குறை கூறுவார்கள். சாலையின் மேடு-பள்ளங்கள் இருந்தால் அதை போட்ட ஒப்பந்ததாரரையும், அரசாங்கத்தையும் திட்டுவார்கள்.
எதிலும் குறைகாண்பவர்கள்
ஒருசாரார் நெரிசல் மிகுந்த பாதையையும், சேதமடைந்த பாதைகளையும் தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்வதைப் பற்றி யோசித்து அவற்றை எளிதாக கடந்து சென்றுவிடுகின்றனர். அவ்வப்போது ஒருவழிப்பாதையிலும் தவறாக சிலர் பயனித்து நெரிசலை உருவாக்கிவிட்டு, மற்றவர்ளை குறைகூறுவார்கள். இது போக்குவரத்து என்றில்லை, இன்றைய சூழலில் எதற்கெடுத்தாலும் குறைகூறும் கூட்டம் சற்று அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. எந்தக் குறையை எடுத்து அலசி பார்த்தாலும், அந்த குறையின் துவக்கப்புள்ளி இந்த நடுத்தரவர்க்க மக்களின் ஏதேனுமொரு தவறான செய்கையை சார்ந்தே துவங்கி இருக்கிறது.
சாலை சரியில்லை, அரசாங்கத்திட்டம் சரியில்லை, இலவசமாக கொடுத்து அரிசி சரியில்லை, பொங்கல் பொருட்கள் சரியில்லை என்று எல்லாவற்றிலும் குறை கூறிக் கொண்டிருந்தால், தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அரசாங்கத்தையும், அரசு இயந்திரங்களையும் தன் ஒருவனால் மாற்ற முடியாது என்று எண்ணிக் கொண்டு, குறை சொல்வதை மட்டுமே தொடர்கின்றோம். நடைமுறையில் இப்படியே இலட்சோபலட்சம் மக்கள் தங்களால் முடியாது என்று எண்ணத்தில், குறை சொல்லிக்கொண்டே காலத்தை கழிக்கின்றனர்.
பூணைக்கு யார் மணிகட்டுவது
நடைமுறையில் உள்ள எல்லா தவறுகளையும், குறைகளையும் மாற்ற வேண்டும் என்ற சிந்தனை கிட்டத்தட்ட எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் யாரும் செயல்படுத்த முன்வருவதில்லை.
நீ என்ன செய்யப்போகிறாய்
அரசாங்கத்தையும் அரசு இயந்திரங்களையும் திருத்துவது ஒருபுறமிருக்கட்டும். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டு உன் வாழ்க்கையை அர்த்தமின்றி வாழ்ந்து முடிப்பாய். நேற்றும்-இன்றும் சாதித்தவர்கள் எல்லோரும், யதார்த்தத்தில் இன்றுள்ள குறைபாடுகளுக்கு உள்ளேயே பிறந்து, வளர்ந்து சாதித்தார்கள். நீ மட்டும் ஏன் குறைகளை மட்டும் பெரிதுபடுத்திக் கொண்டு காலம் தாழ்த்துகிறாய்.
குறைகளே இல்லாத சமுதாயம் வேண்டுமென்றால், உனக்கு இந்த பிறவியில் அது சாத்தியமில்லை. இன்றைய நடைமுறையில், சாத்தியமற்றதைப் பற்றி குறைகூறி கவலைப்பட்டு, உன் நேரத்தை ஏன் வீணடிக்கிறாய். இந்த குறைபாடுகளைக் கடந்து, நீ எப்படி சாதிப்பது? என்று யோசி. ஒருவேளை இந்த குறைகளைக் களைவதே உன் லட்சியம் என்றால், அரசின் உயர் பதவிகளுக்கு சென்று எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி யோசி.
குறைகளும்-தீர்வுகளும்
இங்கு உள்ள எல்லாவற்றிலும், ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கிறது. அதேபோல், இங்குள்ள எல்லா குறைகளுக்கும் ஏற்ற ஒரு கடினமான தீர்வும் உண்டு, சற்று எளிமையான தீர்வும் உண்டு. கால சூழ்நிலைகள், மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப, உரிய தீர்வுகளை செயல்படுத்த வேண்டும். சமுதாயத்தில் உள்ள குறைகளை களைவதே உன் இலட்சியம் என்றால், அரசு அதிகாரியாகவோ, மக்கள் சேவகனாகவோ உன் அவதாரத்தை துவக்கு.
நீ தெளிவுடன் இருக்கிறாயா?
இந்த சமுதாயம், அரசியல், அரசாங்கம் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று எண்ணினால், உன் இலட்சியம் என்ன என்பதில் தெளிவாய் இரு. பெரும் பொருளும், புகழும் ஈட்டுவது தான் நம்மில் பலருடைய ஆசை. அதை அடைய விரும்பினால், வெறுமனே ஆசை மட்டும் பட்டுக்கொண்டிருக்கக்கூடாது. எந்தத் துறையில் என்ன சாதிக்கப் போகிறாய்? என்ற தெளிவான சிந்தனை வேண்டும். தெளிவில்லாது பயனித்தால், நினைத்த செல்வமும் சேராது, புகழும் கிடைக்காது. பின்னர் அங்கும் இது சரியில்லை, அது சரியில்லை, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறைகூறிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
உண்மையில்,
நம் தனிப்பட்ட ஆற்றலைவிட அண்டத்தில் சாதிக்க வாய்ப்புக்கள் அதிகம்;
ஆனால்,
நீ வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சோர்ந்துபோய் உட்கார்ந்தால்
எழுப்புவதற்க ஈசனும் வரமாட்டார்; ஏசுவும் வரமாட்டார்;
சீக்கிரத்தில் எமன்தான் அழைப்பிதழ் தருவார்;
மறந்துவிடாதே
“குறைகள் இருக்கலாம் - நிறைகளை பார்;
சிக்கல்கள் வரலாம் - தீர்வுகளில் கவனம் செலுத்து;
தோல்விகள் வரலாம் - படிப்பினைகளை மறவாதே;
வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம்,
எல்லாமே ஒரு நிலைதான் – நிரந்தரமன்று;
எல்லாமே கடந்து போகும்;”
“அன்று அன்னியர் ஆட்சி என்று குறைகூறினர்;
இன்று கொள்ளையர் ஆட்சி என்று குறைகூறுகின்றனர்;
நாளை இயந்திர ஆட்சி என்று குறைகூறுவர்;
குறைகளுக்கு எல்லையே இல்லை – ஆனால்
உன் வாழ்க்கைக்கு எல்லை இருப்பதால்
குறைகளை பொருட்படுத்தாமல்
சமயோசிதமாக வாழக் கற்றுக்கொள்”
- [ம.சு.கு – 16.02.2022]
Comments