“சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்;”
பயிற்சி செய்தால் முடியாத காரியம் ஏதும் இல்லை என்று காலங்காலமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அரும்பெரும் சாதனைகளைப் படைக்க எல்லோருக்கும் ஆசை. ஆனால் அதற்கான பயிற்சிகள் மிகக்கடுமையாக இருக்கக்கூடும் என்பது தான் எல்லோருக்கும் இங்கு பயம்.
பயிற்சிகள் கடுமையானவையா?
ஆம்! பெரிய சாதனைகளை, செயற்கரிய சாதனைகளைச் சாதிக்க கட்டாயம் பயிற்சிகள் தேவைதான். ஆனால் பயிற்சிகளில் கடுமையென்பது அதை நாம் அணுகும் முறையில் தான் இருக்கிறது. நம்முடைய உடலை பின்புறமாக வளைக்க முயற்சித்தால் பெரும்பாலானவர்கள் தோற்றுப் போகிறார்கள். ஆனால் சர்க்கசில் பயிற்சி பெற்ற நபரோ, அல்லது நன்கு யோகாசனம் பயின்று நபரோ, எந்தவொரு சிரமமும் இன்றி இலாவகமாக உடலை பின்புறம் வளைத்து பூமியை தொடுகின்றனர். நம்மால் முடியாதது அவர்களால் எப்படி எளிதாக செய்ய முடிகிறது?
பெரிய எருதை இலகுவாக தூக்கியவர்
கிரேக்க வரலாற்றில் “மயிலோ” என்ற மல்யுத்த வீரர், பல ஒலிம்பிக் வெற்றிகளை பெற்றவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையாக அதிக எடையை தூக்க கூடிய நபர் எவருமில்லை என்று வரலாறு கூறுகிறது. ஒரு பெரிய எருதை தன் தோள்களில் இலாவகமாக நீண்டதூரம் சுமக்கும் வலிமையுடையவர். அவருடைய பயிற்சிமுறை சற்றே மாறுபட்டு இருந்தது.
ஒரு புதிதாக பிறந்த கன்று குட்டியை அதன் பிறப்பு முதலே தினம்தோறும் தன் தோள்களில் சுமந்து நடக்கத் துவங்கினார். அந்த கன்று வளர வளர, அவருடைய அன்றாட பயிற்சியும், ஆற்றலும் வளர்ந்துகொண்டே இருந்தது. அந்த கன்று எவ்வளவு பெரிய எருதாக வளர்ந்துவிட்ட பொழுதிலும், வழக்கம் போல் இலாவகமாக அதைத் அவரால் தோள்களில் சுமக்க முடிந்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அன்றாட பயிற்சி
இந்த உடலை வளைப்பதும், எருதை சுமப்பதும் எப்படி சாத்தியமாயிற்று என்று நான் உங்களுக்கு விளக்க தேவையில்லை. அந்த எருது கன்றாக இருக்கும் காலம்தொட்டு சுமக்கத்துவங்கி அதன் ஒவ்வொரு சிறு வளர்ச்சியும் படிப்படியாக அவரை வழுவேற்றியது. தொடர்ந்து பயிற்சியி்ன் பலன், நன்கு வளர்ந்த எருதையும் எளிதாக சுமக்க முழுமையான வழுவை அவர் பெற்றிருந்தார். உடலை வளைப்பவர்களும் அப்படித்தான். திடீரென்று பின்புறம் வளைக்க முடியாது, ஏனெனில் அதற்கு நாம் நம்முடலை பழக்கப்படுத்தவில்லை. சர்க்கஸ்காரர்களைப் போல வேகமாக வளைக்காவிட்டாலும், தொடர்ந்த யோகாசனப் பயிற்சிகளின் மூலம் கட்டாயம் எல்லோராலும் அது சாத்தியப்படும்.
இப்படித்தான் எந்த ஒரு பயிற்சியும், சாதனையும். எடுத்தவுடன் ஒரு 100 கிலோ எடை தூக்க வேண்டும் என்று முயற்சித்தால், யாராலும் முடியாது. வேண்டுமென்றே முயன்றால், உடல் தசைகள் பிடித்துக்கொள்ளக்கூடும். அதேசமயம், சிறுசிறு எடைகளாக பயிற்சி செய்தால், 2-3 ஆண்டுகளில், உங்களால் அந்த 100 கிலோ எடையை எளிதாக தூக்க முடியும். அந்த பயிற்சிக்கு கிரேக்க வீரர் “மைலோ”வின் பயிற்சி முறை ஒரு சிறந்த உதாரணம்.
இயல்பான சோம்பேறித்தனம்
உதாரணங்கள் எல்லாம் சரி. ஆனால் தினமும் நம்மால் ஒரே மாதிரி பயிற்சி செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறீர்களா? நமது உடல்நிலையும், மனநிலையும், தினம்தினம் மாறுபட்டு இருப்பதால், சில நாட்களில் பயிற்சி செய்வது கடினமாகி விடுவதாக எண்ணுகிறீர்களா?
உண்மைதான்! இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு இயல்பான பிரச்சனை. மனித உடல் இயல்பில் சோம்பேறித்தனம் கொண்டது. வாய்ப்பு கிடைத்தால், ஒன்றும் செய்யாமல் சோம்பலாய் பொழுதைக் கழிக்கவே விரும்பும். நாமாக களம் கண்டு பயிற்சித்தால் மட்டுமே, உடல் ஒத்துழைக்கும். நாம் உத்வேகம் இழந்தால், இயல்பாக உடன் சோம்பேறித்தனத்தில் ஊறிவிடும்.
என்ன சாதிக்க வேண்டும்?
நாம் ஒவ்வொருவரும், நிறைய சாதித்த, சமுதாயத்தால் நல்ல முறையில் அங்கீகரிக்கப்பட, பேரவா கொண்டிருக்கிறோம். அதன் முதல்படியாய், நாம் என்ன சாதிக்க வேண்டும்? என்ற தெளிவு நம்மிடம் இருக்கிறதா?. அப்படி எதை சாதிப்பது என்ற தெளிவு இல்லாவிட்டால், பின்னர் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. பாரதி சொன்ன வேடிக்கை மனிதராய் வெந்து சாக வேண்டியதுதான்.
முதல் கேள்வியாகிய என்ன சாதிக்க வேண்டும்? என்ற தெளிவு இருந்தால், அடுத்து அந்த சாதனையை நோக்கிய பயணத்தை தீர்மானிப்பது முக்கிய வேலையாகிறது. எவ்வளவு பெரிய வெற்றிப் படம் எடுப்பதானாலும், அதை காட்சி வாரியாக வடிவமைத்து, ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக எடுத்து, முன்னுக்கு பின் முரணானவற்றை கோர்த்து சரி செய்தால்தான் வெற்றி கிடைக்கும். ஒரே நாளில், ஒரே இரவில் பெரிய வெற்றியை கனவு காண்பதில் பயனேதுமில்லை. உங்கள் லட்சியத்தை நோக்கிய பயணத்தை, படிப்படியாக அமைக்க வேண்டும்.
அடிப்படையை பலப்படுத்துங்கள்
எந்தவொரு முயற்சியிலும், அதற்கான அடிப்படைகள் சரியாக அமையப் பெற்றால் மட்டுமே, எதிர்வரும் சவால்களையும், சறுக்கல்களையும் சமாளித்து முன்னேற முடியும். உங்கள் லட்சியம் பயணத்தில் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்து வைக்கவேண்டும். ஒவ்வொரு படிநிலையையும் முழுமையாக முடித்து, அடிப்படையை தொடர்ந்து பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய அடிப்படையை பலப்பட வேண்டுமானால், உங்கள் செயல்களை நீங்கள் எளிமையாக்க வேண்டும். செயல்களை எளிமையாக்க வேண்டுமானால், அந்த செயல்களை ஆயிரமாயிரம் முறை செய்து பழக்கப்பட வேண்டும். செயல்களை எளிமையாக்குங்கள் என்றால், உடனே எளிமையாக இருப்பதை மட்டும் தேர்ந்தெடுத்து செய்யுங்கள் என்று பொருள் கொள்பவராக இருந்தால், நீங்கள் பெரிய சாதனைகளை செய்ய தகுதியற்றவராகி விடுவீர்கள். செயல் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதை திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் எல்லாச் செயல்களையும் மிக எளிமையாக்கலாம்.
சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும், விராட் கோலியும் எவ்வளவு இலாகவமாக, நேர்த்தியாக பந்தைத் தடுத்து ஆடுகிறார்கள்;
ரொனால்டோ, மெஸ்ஸியின் கால்களில் பந்து எப்படி சுழன்று வித்தை காண்பிக்கிறது;
உணவகங்களில், வெங்காயம் எவ்வளவு எளிதாக பொடிப்பொடியாக நிறுத்தப்படுகிறது;
இவை ஒவ்வொன்றும் நமக்கு ஆரம்பத்தில் கடினமான காரியங்கள்தான். ஆனால் இவற்றை செய்து பழகியவர்களுக்கு, இவை மிகமிக எளிதாகிவிட்ட ஒன்று.
பயிற்சியால் எளிமையாக்கப்பட வேண்டும்
நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் இலட்சிய பாதையில் உள்ள எல்லா செயல்களும், உங்களுக்கு பழக்கப்படவேண்டும். உங்களுடைய பயிற்சியின் அளவானது, அந்த செயலை கண்ணை மூடியும் எளிதாக செய்யுமளவிற்கு பயிற்சியினால் உங்களுக்கு எளிமைபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சில செயல்களை பழக்கத்தினால் எளிமையாக்கலாம்!
சில செயல்களை அதன் தன்மையை புரிந்து சற்று மாற்றியமைத்து எளிமையாக்கலாம்!
சில செயல்களை உதவிக்கு ஆள் சேர்த்து எளிமையாக்கலாம்!
சில செயல்களை தானியங்கியாக்கி எளிமையாக்கலாம்!
நாம் செய்ய வேண்டிய செயல்களை, ஏதேனுமொரு முறையில் எளிமையாக்கி நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தால் தான் பெரிய வெற்றிகள் சாத்தியப்படும்.
செயல் எதுவானாலும்
சிந்தனை செய்து செய்யுங்கள்;
தொடர்ந்த பழக்கத்தினால்
எல்லாச்செயல்களையும் எளிமையானதாக்குங்கள்;
எளிமையாக்கியதைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து
அடுத்த கட்டத்திற்கு நீங்கள் முன்னேறி செல்லுங்கள்;
நீங்கள் செய்வதற்கு
இன்னும் நிறைய அரும்பெரும்
சாதனைகள் காத்துக்கொண்டிருக்கின்றன;
- [ம.சு.கு 14.09.2022]
Comments