top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : நிறுத்தாமல் தொடருங்கள்

Updated: Oct 5, 2022


“இன்று களைப்பாக இருக்கிறது நாளை பார்த்துக் கொள்ளலாம்”


“இரண்டு நாட்கள் செய்யாமல் விட்டால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது”


நம் லட்சியப் பயணத்தில் நாம் தினமும் செய்யும் காரியங்களை, தவறவிடுகின்ற நாட்களில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள் இவை.


சற்று யோசித்துப் பாருங்கள்! நீங்கள் எடுத்து லட்சியங்களில் முன்னேற்றம் ஏற்படாமல் போனதற்கும், உங்களின் இந்த ஆறுதல் வார்த்தைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று?


ஒரு நாள் – நூறு நாளாகி விடுகிறது


யதார்த்தத்தில், இன்றொரு நாள்மட்டும் செய்யவில்லை என்று தள்ளிப்போடத் துவங்கும் நாம், அது அப்படியே படியாய் பல நாட்களுக்கும் விரிந்து, எடுத்த செயல் முற்றிலுமாய் செய்யப்படாமலேயே போய்விடுகிறது. எதற்காக அந்த செயலை, பயிற்சியை துவக்கினோமோ, அந்த லட்சியம் மறந்து, எடுத்த செயலை, பயிற்சியை பாதியிலேயே விட்டுவிடுகிறோம். பின்னாளில் நாம் சாதிக்கவில்லையே என்று மனம் வருந்துகிறோம்.


இந்த மனவருத்தம் பின்னாளில் நமக்கு வரக்கூடாதென்றால், இன்றைக்கும் - என்றைக்கும் எடுத்த செயலை, செய்யும் பயிற்சிகளை, தினம் தவறாமல் தொடர்ந்து செய்து வந்தால்தான் வெற்றி சாத்தியப்படும். அப்படி எந்த வகை இடர்வந்த போதிலும், கொண்ட இலட்சியத்தில் மன உறுதியோடு முன்சென்றவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக பரிமளித்திருக்கின்றனர்.


வெற்றிபெற சுகதுக்கங்களை இழக்கவேண்டுமா?


அப்படியானால் வெற்றியாளர்கள் தனது குடும்பம், சொந்த-பந்தங்கள், சுக-துக்கங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, எப்போதும் பணியிலேயே மூழ்கிக்கிடக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கக் கூடும்.


இதற்கு என்னுடைய பதில் ஆம் - இல்லை என்ற கலவையான பதில்தான்!


  • ஆம்”! - சில சுகதுக்கங்களை கடந்து நின்றால் தான் வெற்றி பெற முடியும். அன்றாட சிற்றின்பங்களில் பின்னால், 5-10 நிமிட அற்ப சந்தோஷங்களின் பின்னால் சென்றால், மாபெரும் வெற்றிகளை எப்படி அடைவது?

  • கூடவே “இல்லை”! - என்ற பதிலும் இருக்கிறது. இலட்சியங்களை அடைகிறேன் என்ற பெயரில், நம் குடும்பத்தை இழந்து நிற்க முடியாது. அவர்களுக்கும் தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டும். அதேசமயம் நம் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்தவேண்டும். உடல்நிலை சரியில்லாத நாட்களிலும் பயிற்சி செய்வது சாத்தியமில்லை. எந்தவொரு வெற்றியாளரும் அப்படி பயிற்சி செய்யப் போவதில்லை.

வெற்றியாளர்களும் சில காரணங்களுக்காக விடுப்பு எடுக்கத்தானே செய்கின்றனர். அதைப் போல நானும் எடுப்பதில் தவறில்லை என்று என்னிடம் வாதாடாதீர்கள். அப்படி சில நாட்கள் பயிற்சியை தவறவிடும் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் நீங்கள் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்று சிந்தித்திருக்கிறீர்களா?


வெற்றியாளர்களிடம் அப்படி என்ன தனித்தன்மை இருக்கிறது?


வெற்றியாளர்களுக்கும், உங்களுக்கும் அப்படி என்ன வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறது;


எனக்கு தெரிந்தவரை


  • வெற்றியாளர்கள், விட்ட இடத்திலிருந்து கூடிய விரைவில் துவக்கி விடுகிறார்கள் மற்றவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மறுமுறை துவக்குவது தாமதப்படுத்துகிறார்கள். காலதாமதம் அதிகமாவதால், அவர்களால் முந்தைய ஆற்றலை, முந்தைய வேகத்தை, சீக்கிரத்தில் பெற முடிவதில்லை.

  • வெற்றியாளர்கள், அன்றாட பயிற்சியின்போது, புதிய முயற்சிகளை மேற்கொண்டு தங்களது ஆற்றலை வளர்க்கின்றனர். மற்றவர்களோ, செய்ததையே திரும்ப செய்து நேரத்தை கடத்துகின்றனர்.

  • வெற்றியாளர்கள், தோல்விகளைக் கண்டு அஞ்சுவதில்லை. அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளை கொண்டு, அடுத்த முயற்சியில் வலுவாக இறங்குகிறார்கள். மற்றவர்களோ, தோல்வியிலே துவண்டு, விலகியோடப் பார்க்கின்றனர்.

  • வெற்றியாளர்கள், வாய்ப்புகளைத் தேடிச் செல்கின்றனர். மற்றவர்களோ, வாய்ப்புக்கள் தானாக அவர்களிடம் வரும் என்று காத்திருக்கின்றனர்.

  • வெற்றியாளர்கள், விதியையும் - அதிர்ஷ்டத்தையும் அதிகம் நம்பியிருப்பதில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில், உழைப்பவர்களுக்கு இரண்டுமே தானாக உரிய நேரத்தில் வந்து சேரும் என்பது தெரியம். ஆனால் மற்றவர்களோ, இவை இரண்டையுமே பெரிதெனப், தேவையில்லாமல் பேசி நேரம் கழித்துவிடுகின்றனர்.

இப்படி வெற்றியாளர்களுக்கும், ஏனையவர்களுக்குமான வித்தியாசத்தை பட்டியலிட தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே போகும். பட்டியல் பெரிதாய் இடுவதில் நமக்குப் பலன் இல்லை. அதன் சாராம்சத்தை உணர்ந்து, கருப்பொருளை கண்டு, வாழ்வை வளமாக்க முயற்சிக்க வேண்டும் என்பதே நம் எல்லோருடைய ஆசை.


நின்று யோசிப்பதில் பயனில்லை


எண்ணற்ற அறிஞர்களுடன் கலந்துரையாடியதில், சிலநூல்களைப் படித்ததில், நான் கற்றுக் கொண்ட ஒரே பெரிய பாடம் “நிறுத்தாமல் ஓட வேண்டும்”; ஒருவேளை இயற்கையே தடை ஏற்படுத்தினாலும், அடுத்த நாள் கட்டாயம் மறுபடியும் ஓடத்துவங்கி விட வேண்டும். ஒருநாள் தடைபட்டது, எந்த காரணத்திற்காகவும், நிரந்தர தடை ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய தலையாய கடமை.


  • கடமையில் கண்ணயர்ந்தவர்கள், வாழ்க்கையெனும் கடலில் மூழ்கிச்சாக வேண்டியதுதான்;

  • கடமையில் கவனமாய் முன்னேறியவர்களோ, அதே கடலில் மூழ்கி முத்தெடுத்து விடுகிறார்கள்.


முத்தெடுப்பது உங்கள் கைகளில்தான்


ஆம்! வாழ்க்கையென்பதே ஒரு மிகப்பெரிய கடல் தான். அதில் மூழ்கி சாவதும், முத்தெடுப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. நமக்கு நல்வழிகாட்ட சிலர் வந்து போவார்கள். நம்மை திசைதிருப்ப, பல ஏமாற்றுக்காரர்கள் வந்து போவார்கள். எது, எவை, எங்கு, எதற்காக என்று இனங்கண்டு, விழிப்புடன் தொடர்ந்து ஓடுபவர்கள் மட்டுமே வெற்றியாளர்களாக வெளிப்படுகிறார்கள்.


ஓடுங்கள்!

தொடர்ந்து ஓடுங்கள்!

தடைகளைத் தகர்த்து ஓடுங்கள்;

ஒருநாள்

வெற்றி உங்களைத் துரத்தி வரும்!

எத்தனை இடர் வந்தாலும்

"மனிதம் காத்து"

தொடர்ந்து ஓடுங்கள்;

உங்கள் வாழ்க்கை – கட்டாயம்

பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமையப்பெறும்!!


- [ம.சு.கு 05-10-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page