பாடங்களில் சந்தேகங்களா?
பள்ளி கல்லூரிகளில் பாடங்கள் நடத்தப்படும்போதோ, அல்லது அவற்றை தனியாக படிக்கும்போதோ பல சந்தேகங்கள் நமக்கு தோன்றும். அவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற்றால், அது நமக்கு எளிதாகும். ஆனால் நம்மில் எத்தனைபேர் எழுந்து சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுகின்றோம்?
80% அதிகமானோர், ஏதோ ஒரு தயக்கத்தின் காரணமாக ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்பதே இல்லை. சில சமயங்களில் அவற்றை சக மாணவர்களிடமோ, நண்பரிடமோ கேட்டும் தெளிவு பெறலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானோர், ஏனோ சகமானவரிடமும் கேட்பதில்லை. சந்தேகங்கள் தெளிவு பெறாத போது, அந்தப் பாடம் நமக்கு புரியாமலே போய்விடுகிறது. புரியாதவைகளை எத்தனை படித்தும் பயன் ஏதுமில்லை. சந்தேகங்களை கேட்பதற்கு ஏன் இந்த தயக்கம்?
கூச்ச சுபாவம்
சுயதொழில் ஆகட்டும், விற்பனை பிரதிநிதி பணியாகட்டும், நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அன்றாடம் பல புதிய வாடிக்கையாளர்களை சந்தித்து பேசவேண்டும். தான் விற்கும் பொருள் அவர்களுக்கு தேவையா? இல்லையா? என்பதைப் பற்றி அதிகம் ஆராயாமல், அவரிடமே நேரடியாக பேசி கேட்டுவிட வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களை நாடி நம் பொருட்களை விற்பதற்கு தயக்கப்பட்டுக் கொண்டு, சிலர் தொழில் செய்யவே வருவதில்லை. தங்களின் கூச்ச சுபாவத்தின் காரணமாக விற்பனைப் பிரதிநிதி வேலையை தவிர்க்கிறார்கள். எவரொருவரிடமும் இன்ன பொருள் வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பலருக்கும் ஏன் கேட்பதற்கு தயக்கம்?
குழந்தைகளுக்கு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்பதில் தயக்கம்
இளைஞர்களுக்கு தன் மனம் கவர்ந்தவளிடம் சென்று பேச தயக்கம்
வியாபாரத்தில் புதிய அறிமுகம் இல்லாத வாடிக்கையாளரிடம் பொருட்களை விற்பதற்கு முயற்சிக்க தயக்கம்
பண உதவியோ? கடனோ? கேட்கத் தயக்கம்
மேடையில் பேசுவதற்கு தயக்கம்
புதிய பிரச்சனைகளுக்கு ஏற்ற தீர்மானம் கண்டு முடிவு எடுக்க தயக்கம்
சான்றோரிடம் ஆலோசனைகள் கேட்பதற்கு தயக்கம்
இப்படி எண்ணிலடங்கா தயக்கங்கள் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏன் இந்த தயக்கம்? என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களிடம் பதில் இல்லை.
சிறுதயக்கம் வரலாற்றை மாற்றியது
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன், தன் காலடியை முதலில் வைக்க சில நொடிகள் தயங்கினான். அடுத்ததாக இருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் தயக்கமின்றி அடி வைத்ததால், விண்ணில் கால் பதித்த முதல் மனிதன் என்னும் வரலாற்று பெருமையை பெற்றான். ஒரு கணநேர தயக்கம், வரலாற்றை மாற்றி விட்டது. நன்கு பயிற்சி பெற்று எல்லாம் அறிந்திருந்தும், ஏன் இந்தக் கடைசி நிமிடத் தயக்கம்?
இப்படித் வெவ்வேறுபட்ட தயக்கங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். வெறுமனே தயக்கங்களின் பட்டியலை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
தயக்கத்தை எப்படி சாமாளிப்பது
இவை அனைத்தும் ஏன்? எதனால்? என்பதை அறிந்து, எப்படி? தவிர்ப்பது என்று விடை காண வேண்டியது மிக முக்கியம். வெற்றியாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டில் இந்தத் தயக்கம் முக்கியமான ஒன்று. தயங்குபவர்கள் எந்த ஒரு பெரும் முயற்சியும் எடுப்பதில்லை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற அவர்களின் தயக்கமே அவர்களுக்கு எதிரியாகி விடுகிறது.
எப்படி இந்த தயக்கத்தை தவிர்ப்பது / வெற்றிகொள்வது? இதற்கு வெளிப்புற மருந்துகள் இல்லை. பெரும்பாலும் உங்கள் மனமும், நம்பிக்கையுமே சிறந்த மருந்துகள். தயக்கத்தின் காரணமாக பல செயல்கள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க, சில யோசனைகள்:
முதலில் - உங்களால் முடியும் என்று உங்கள் மனதில் தொடர்ந்து சொல்லிக் கொள்ளுங்கள்;
கேள்விகளைக் கேட்பதால் நீங்கள் எந்த வகையிலும் மற்றவர்களுக்கு தாழ்ந்தவர் இல்லை என்பதை உணருங்கள். கேட்காமல் / தெரிந்து கொள்ளாமலே இருந்தால் தொடர்ந்து முட்டாளாகவே வாழ நேரிடும்;
எவரேனும் உதவி கேட்கும் போது, உங்களால் முடிந்ததை செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் தேவையில்லை. செய்யாதவர்கள் மத்தியில் நீங்கள் உதவி செய்வது உண்மையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம்;
உதவி கேட்டால் உங்களுக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள் என்று எண்ணவேண்டாம். கட்டாயம் இயன்ற அளவுக்கு மக்கள் உதவுவார்கள்;
கேட்க வேண்டுமே என்பதற்காக, தெரிந்து விடயங்களையே கேட்டு பிறர் நேரத்தை வீணடிக்க வேண்டாம்;
ஒரு சிலருக்கு ஆங்கிலம் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். தினமும் 2-3 புதிய வார்த்தைகளை படித்து அன்றைய தினத்தில் அதை பயன்படுத்திப் பழகுங்கள். ஒரே ஆண்டில் உங்களுக்கு இருக்கும் ஆங்கில வார்த்தை சிக்கல் தீர்ந்துவிடும்
எந்தச் செயலையும் படிப்படியாக செய்ய முடியும் என்பதை உணர்ந்து, தயக்கமின்றி முதல் அடியை எடுத்து வையுங்கள்
ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்
உங்கள் முயற்சியினால்
வென்றால் - சரித்திரம்;
தோற்றால் - அனுபவம்;
முயற்சிக்கு கட்டாயம் பலன் உண்டு;
தயங்காமல் முன்னேறுங்கள்;
கேட்டால்தான் கிடைக்கும்;
செய்தால்தான் முடியும்;
தயங்காமல் தொடங்குங்கள்;
வெற்றி நமதே!!
- [ம.சு.கு – 09-03-2022]
Comments