top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வாழ்க்கையும் – தொடர் சோதனைகளும்

உங்களை நீங்கள் அறிந்துகொள்ள;

உங்கள் திறமைகளின் அளவுகளை புரிந்து கொள்ள:

சோதனைகள் மட்டுமே ஒரே வழி!

அவ்வப்போது உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள்!


மாணவர்களும்-தேர்வுகளும்


கல்வி பயில்கிறீர்களா?


இடைநிலை, காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு என எண்ணற்ற தேர்வுகளை தொடர்ந்து சந்திக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அதுவரை கற்ற பாடங்களில் உங்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. உங்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள இந்த சோதனைகள் அத்தியாவசியத் தேவையாகிறது.


இந்தத் தேர்வுகளில் தேர்ச்சியடையாதவர்கள், மீண்டும் படித்து எழுதவேண்டியுள்ளது. தொடர்ந்து அந்த புத்தக அறிவில் அடிப்படை நிலையை கடக்கும் வரை மீண்டும் மீண்டும் படித்து தேர்வை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த தேர்வு முறை, அசிரியர்களுக்கு, மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க பெரும் உதவியாக இருக்கிறது.


சற்று யோசித்துப்பாருங்கள் இந்த தேர்வுகள் இல்லாத கல்வி எப்படி இருக்குமென்று?


  • மாணவர்கள் என்ன கற்றார்கள்?

  • எவ்வளவு கற்றார்கள்?

  • எப்படி புரிந்து கொண்டார்கள்?


என்பது யாருக்கும் தெரியாது. பாடம் போதித்தல் என்பது ஒரு வழிப் பாதையாக இருக்கும் பட்சத்தில், ஒரு சிலர் கற்றுக் கொள்வார்கள்! பெரும்பாலானோரின் ஈடுபாடு குறைந்து விளையாட்டு அதிகரித்துவிடும்!! இறுதியில் கற்றலின் பயன் குன்றிவிடும். கற்றலும், கற்றலில் புரிந்து கொண்டதை அவ்வப்போது சோதிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இருக்கவும் வேண்டும்.


தேர்வு முறைக்கு எதிராக குரல்


ஆனால் ஒரு சாரார் , கீழ்கண்ட சிலகாரணங்களுக்காக, தேர்வு முறைகள் தவறென்று வாதிடுகின்றனர்.


  1. தேர்வுகள் குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி கற்றலை பாதிக்கிறது;

  2. குழந்தைகளின் திறமைகள் வெவ்வேறாக இருக்க, ஒரே மாதிரியான தேர்வு முறையும், மதிப்பெண் முறையும் தவறானது என்கிறார்கள்;

  3. குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவும், அப்படியே தேர்வில் எழுதவுமே இன்றைய கல்விமுறை கட்டாயப்படுத்துகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனையும், ஆற்றலையும் இந்தத் தேர்வுமுறைகள் எவ்விதத்திலும் வளர்ப்பதில்லை என்று வாதிடுகிறார்கள்;


ஒருபுறம் தேர்வு-மதிப்பெண்கள் நடந்துகொண்டுருக்க, மறுபுறம் இந்த கல்விமுறை, தேர்வுகள் குறித்த சர்ச்சைகளும்-விவாதங்களும் என்றென்றும் ஒருதொடர்கதை தான்.


இந்த தேர்வும், சோதனைகளும் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்றெண்ணி விட்டுவிடாதீர்கள். இந்த தேர்வுகளும், திறமைகளுக்கான சோதனைகளும் மாறுபட்ட வடிவங்களில், நம் வாழ்க்கையின் அன்றாட அங்கமாகிவிட்டது என்பது நடைமுறை யதார்த்தம்.


பிறப்பு முதல் இறப்பு வரை


எங்கும்-எதிலும் போட்டிகள்; பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து போட்டிகளையும் சோதனைகளையும் சந்தித்தே ஆகவேண்டும். ஒரு பணியில் சேர 100 பேருடன் நேர்காணலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டியிருக்கிறது. போட்டிகளும், சோதனைகளும் ஒருபுறம் வெளிப்படையாக இருக்க, பல விடயங்களில் இந்தப் போட்டியும்-சோதனையும் மறைமுகமாக நிகழ்வது, அன்றாட வாழ்க்கையை தொடர்வதையே மிகப்பெரிய சவாலாக ஆக்கிவிட்டிருக்கிறது.


போட்டியும் – சோதனையும் – தேவையா?


இப்படி நடைமுறை வாழ்வில் போட்டிகளும்-சோதனைகளும் தொடர்கதையாக இருக்கும்போது, நம்முள் எழும் முக்கியமான கேள்வி - இந்தப் போட்டி மனப்பான்மையும், தொடர் சோதனைகளும் தேவைதானா? என்பது;


  • போட்டியும், தொடர் சோதனைகளும் அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றொரு வகைப் புகார்;

  • தொடர் சோதனைகள், தேவையற்ற போட்டி-பொறாமைகளை வளர்ப்பதாக ஒரு வகைப் புகார்;

  • இந்தப் போட்டிகள், மனிதனை பொருள் சார்ந்த வாழ்க்கையிலேயே தெடர்ந்து சிக்கி உழலவைத்து, மெய்ஞானத்தை தவிர்க்கச் செய்கிறது என்று ஒருவகை புகார்.

  • இந்தப் போட்டிகள் குடும்ப உறவு, சமுதாய உறவுகளை வெகுவாக பாதிப்பதாக மிகப்பெரிய புகார்.


இப்படி எண்ணற்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த தொடர் போட்டியும், சோதனைகளும் சார்ந்த வாழ்க்கை முறை நமக்கு தேவைதானா? என்று கேள்வி எல்லோருடைய சிந்தனையிலும் தொடர்ந்து வந்து போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால் யதார்த்த வாழ்க்கையில், யாரும் இந்தப் போட்டியும் பொறாமையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலிலிருந்து வெளிவருவதில்லை. வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த மாயச்சக்கரம் யாரையும் அவ்வளவு எளிதில் வெளியே விடுவதில்லை.


நீங்களாக உணர்ந்து மெய்ஞ்ஞானத்தை நோக்கிய பயணத்தை துவக்கினாலும், அங்கும் எண்ணற்ற காரணிகள் உங்களை திசைதிருப்ப காத்திருக்கின்றன.


மாற்றங்களை மெதுவாக துவக்குங்கள்


இந்த சிறு கட்டுரையை எழுதும் நான், உங்களை மெய்ஞானம் பெற துறவறம் ஏற்று செல்லுங்கள் என்று ஊக்குவிக்கப் போவதில்லை. நடைமுறையில், பொருள் சார்ந்த மாய உலகத்தில் பிறந்து விட்டோம். அந்தப் பொருள் சார்ந்த வாழ்க்கை முறையை உடனடியாக மாற்ற முடியாது. ஆனால் குறிப்பிட்ட களநிலவரத்தை புரிந்து கொண்டு, அந்த நடைமுறை யதார்த்தத்திலேயே பயணித்து, மாற்றங்களை மெதுவாய் துவக்குங்கள். நம்மை சீர்படுத்திக் கொண்டு, நமது அடுத்த தலைமுறையினரையும் சிறந்த மனிதர்களாக ஆக்கும் பெரும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.


பிறப்பு முதல் இறப்பு வரை


வாழ்க்கையில் கற்றல் தொடங்கி இறப்பு வரை போட்டிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏன் பல லட்சம் உயிரணுக்களுடன் போட்டியிட்டு வெற்றியடைந்துதான், நாம் உயிர் பெற்றோம் என்று அறிவியல் நம் பிறப்பின் மூலாதாரத்தை தெளிவுபடுத்துகிறது.


நம் ஜனனத்தின் வித்தே பெரும் போட்டியின் வெற்றியாக இருக்கும் போது, வாழ்க்கையில் போட்டிகளும் நம் திறமைகளுக்கான சோதனைகளும் தொடர்கதைதான். அதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல், போட்டியில் பங்கெடுத்து வெற்றி கொள்ளுங்கள்.நீங்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள்தான் என்பதில் மிக உறுதியாக இருக்க வேண்டும்.


வாழ்க்கை – வெறும் போட்டிதான் – முடிவல்ல


இந்த எல்லா விடயங்களை காட்டிலும் நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உண்டு.


"வாழ்க்கை என்பது ஒரு போட்டி - ஆனால்

போட்டி மட்டுமே உங்களின் வாழ்க்கை ஆகிவிடாது".


சில போட்டிகள் சோதனைகளில் நாம் தோல்வி அடையலாம். ஏன் பலமுறை தொடர்ந்து தோல்விகளைத் தழுவலாம்? அந்த தோல்விகள் நம்முடைய வாழ்க்கையின் முடிவல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஆயிரம் பேர் ஓடும் ஓட்டப்பந்தயத்தில், ஒருவருக்குத்தான் வெற்றி. மீதமுள்ள 999 பேர் அடுத்த முறை போட்டியிட்டு வெற்றிக்கு போராட வேண்டியதுதான். எல்லாருக்குமே வெற்றி கிடைக்கும் என்பது சாத்தியமில்லை.

ஆனால் அந்த ஒவ்வொரு சறுக்களும், தோல்வியும் நம் அனுபவத்தை கூட்டி, நம்மை மெருகேற்றி, அடுத்த வரும் பெரும் சோதனைகளுக்கு தயார்படுத்தும் சிறந்த உத்வேகம் என்று நேர்மறையாக சிந்தித்து தொடர்ந்து உழைக்க வேண்டும்.


தொடர்ந்து உழைப்பு கட்டாயம் வெற்றியாகும்.

வெற்றி தாமதப்படலாம்

ஆனால் சாதுரியமாக உழைத்தவர்களுக்கு

வெற்றி கிட்டித்தான் ஆகவேண்டும்.


மறவாதீர்!


சாதிக்கப் பிறந்திருக்கிறோம்

போட்டிகளும் சோதனைகளும் அன்றாட பிரச்சனை

தைரியமாக எதிர்கொள்ளவோம்;

ஒரு தோல்வி முடிவல்ல;

இது வெறும் போட்டிதான்;

அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்

மேலும் முயற்சியும் பயிற்சியும் செய்து

அடுத்த முறை வெற்றி நமதாக்குவோம்;

போட்டிகளைப் பற்றி அதிகம் கவலை தேவையில்லை

போட்டிகள் வெறும் போட்டிகள் தான்

சோதனைகள் உங்களின் திறமையை மெருகேற்றும்

கட்டாயம் உங்களின் உழைப்பு

வெற்றி சக்கரத்தில் ஏற்றி வைக்கும்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது

உங்களது சாமர்த்தியம் தான்;

முயற்சி! பயிற்சி! தொடர்ந்து பயிற்சி!

போட்டிகளும் சோதனைகளும்

கட்டாயம் உங்களை வெற்றியின் உச்சத்தில் நிலைநிறுத்தும்;

போட்டிகளை தைரியமாக சந்தியுங்கள்

வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!


- [ம.சு.கு - 25-05-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page