top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வாழ்க்கை மராத்தான் ஓட்டமல்ல! அது ஒரு குழப்பமான சிக்கலறை!!

Updated: Apr 2, 2022

வேறுபட்ட மனிதர்கள்


“வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய ஆடுகளம். அதில் யார் வேகமாக செயல்படுகிறார்களோ? யார் வேகமாக ஓடுகிறார்களோ? அவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்” - என்ற வரிகளை பலமுறை கேட்டிருப்பீர்கள். அதன்படி எண்ணற்ற சகோதரர்கள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.


ஒரு சாரார் “வேகம் முக்கியமல்ல, விவேகம்தான் முக்கியம்” என்று சொல்வதையும் கேட்டிருப்பீர்கள்.

கடைசி வர்க்கமோ, எதற்காக ஓட வேண்டும்? நமக்கென்று ஏதோ ஒன்று கிடைக்கிறது. கிடைக்கும் இந்த சொற்ப பொருட்களை வைத்துக்கொண்டு கூடுமானவரை நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போகலாமே என்று இலட்சியம் ஏதுமின்றி (வெற்றி குறிக்கோளின்றி) இருப்பவர்களாகவும் பார்த்திருப்பீர்கள்.


மாராத்தான் ஒட்டம்


உண்மையில் வாழ்க்கை என்பது என்ன? ஒரு ஓட்டப்பந்தயமா? இந்த கேள்வி உங்கள் எல்லோர் மனதிலும் எப்போதாவது எழத்தான் செய்திருக்கும்.


(உதா): மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு மராத்தான் ஓட்டம் ஓடத் தேவை - ஒரு துவக்க இடம், தொடர்ந்து ஓடுகின்ற முயற்சியும், செயல்பாடும், இறுதியாக முடிக்கின்ற இடம். ஒரு மராத்தான் போட்டியில் வெற்றிபெற, உங்களுக்கு முன்னே ஓடவேண்டும் என்ற உத்வேகமும், செயல்படுத்தும் ஆற்றலும் இருந்தால் போதும். இதிலே நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. முடிந்தால் ஓடுவீர்கள், முடியாவிட்டால் நிற்பீர்கள், அல்லது நடப்பீர்கள். பின்னர் திரும்பவும் ஓடுவீர்கள். ஒரு கட்டத்தில் முடியவில்லை என்றால் ஓட்டப் போட்டியில் இருந்து விலகிவிடுவீர்கள். இப்படி முன்னோக்கி மட்டுமே தொடர்ந்து ஓடுவது தான் வாழ்க்கையா? களைப்புரும்போதெல்லாம் வாழ்க்கையில் ஓய்வெடுத்து மறுபடியும் ஓட முடியுமா?


இந்தக் கேள்விக்கான பதிலை, உங்கள் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தோடு சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள்...


யதார்த்த வாழ்க்கை – வாய்ப்புக்கள்


உங்கள் வாழ்க்கையில் சில பாதைகள் தவறென்று தெரிந்தால், திருத்திக் கொள்ள இயலும். உதாரணத்திற்கு, சேர்ந்த வேலை. அது ஒத்து வரவில்லை என்றால் வேறு வேலையை தேடிக் கொள்ளலாம்.


அதே சமயம், உங்கள் வாழ்க்கைத் துணையை நினைத்த மாத்திரத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. அது நம் கலாசாரத்தில் கிட்டத்தட்ட ஒருவழிப்பாதை தான். பாதை சரியில்லை என்றால் திரும்பிவர இயலாது. அந்த பாதையை கூடியவரை திருத்தி சரிசெய்து கொள்ள வேண்டும். அல்லது நமது பயணத்தின் பாணியை சற்றே மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.


உங்களுக்கு வரும் குழந்தைச் செல்வங்களும் ஒருவழிப்பாதை தான்!!


உங்களுக்கு அமையப்பெற்ற பெற்றோரும் ஒருவழிப்பாதை தான்!!


முன்னோக்கி?


இப்படி சில பாதைகளில் திரும்பி வந்து வேறு பாதையை தேர்வு செய்யும் வாய்ப்புக்கள் இருக்கும் தருணங்களும் உண்டு. அதற்கான வாய்ப்பே இல்லாத தருணங்களும் உண்டு.


சில தேர்வுகள் இந்த இரண்டிற்கும் இடைப்பட்டதாக கூட அமையலாம். நீங்கள் பயணித்து, அது சரியானதல்ல என்று திரும்பி வந்து வேறு பாதையை தேர்வு செய்வதானால், வாழ்வில் எண்ணற்ற கால நேரத்தையும், பொருட் செல்வத்தை, இழக்க நேரிடலாம். ஏற்படுகின்ற இழப்பிற்கும், மாற்றவேண்டிய பாதைக்கும், இடையிலான நன்மை-தீமைகளை, இலாப-நஷ்டங்களை (சாதக-பாதகங்கள்) அலசிப்பார்த்து தேர்வு செய்ய வேண்டி வரும்.


இப்படி எண்ணற்ற மாற்றக்கூடிய, மாற்ற இயலாத, தேர்வு தருணங்களை கொண்ட ஒரு வாழ்க்கை, எப்படி முன்னேறி மட்டுமே செல்கின்ற மாரத்தான் ஓட்டம் போன்றதாகும்?


யானைக்கும் அடி சறுக்கத்தானே செய்யும். ஆனால் அந்த சறுக்கல்களை மட்டும் மனித இனம் ஏனோ "தோல்வி" என்று முத்திரை குத்தி, அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது. தடைகளையும் தோல்விகளையும் ஏதோ தீண்டத்தகாததாகவே பார்க்க இந்த சமுதாயம் நமக்கு தொடர்ந்து கற்றுக் கொடுக்கிறது.


சிக்கலறை விளையாட்டு


ஒரு குழப்பமான சிக்கலறை விளையாட்டை விளையாடத் துவங்குகிறோம். உள்ளே வருவதற்கும், வெளியேருவதற்கும் தனித்தனியே வழி இருப்பதை அறிவோம். புகுகின்ற இடமும் தெரியும், வெளியே வரும் இடமும் தெரியும். ஆனால் புகுந்ததில் இருந்து வெளிவரும் வரையிலான சரியான பாதை என்னவென்றுதான் நமக்குத் தெரியாது. ஒவ்வொரு வளைவிலும் நம் முன்னே ஓரிரு வழிகள் இருக்கும். ஒன்று சுற்றிச் சுற்றி வந்து தொடங்கிய இடத்திலேயே நிறுத்தும். இன்னொன்று சரியானதாக இருக்கும்.


சில சமயங்களில், ஒரு சில பாதைகள் மேலே செல்ல வழியில்லாத வகையில் இடையே தடைபட்டுப் போகும். இப்படி இருக்கும் எண்ணற்ற பாதை தேர்வுகளில் சென்று, இடர்பாடுகள் வரும்போது சிறிது பின்புறம் வந்து வேறு வழியைத் தேர்வுசெய்து செல்ல வேண்டும். இதில் எது சரியான பாதை என்பதை கண்டுகொள்ள, தொடர்ந்து செய்த முயற்சியில், நாம் கண்ட தவறான பாதை எதுவென்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில சென்ற பாதையிலேயே திரும்பத் திரும்பச் சென்று காலத்தை வீணடிக்க இயலாது.


பின்வாங்கி முன்னேற வேண்டும்


செல்லும் பாதைகளில் வருகின்ற தடைகள், இடர்பாடுகளுக்கு ஏற்ப நம் பாதையில் சற்று பின்வாங்கி பாதையை மாற்றி முன்னேறவேண்டும். இதை விடுத்து, நான் என்றைக்கும் பின்னோக்கி நகர மாட்டேன் என்று வீரவசனம் பேசினால், பாதையில் தடை ஏற்படும் இடத்திலேயே இருந்து நேரத்தை வீணடிக்க வேண்டியதுதான்.


எப்படி இந்த சிக்கலறை புதிர், நமக்கு முன் செல்ல வேண்டிய நேரத்தையும், பின்னே செல்ல வேண்டிய நேரத்தையும் உணர்த்துகிறதோ, அதுபோலதான் வாழ்க்கையும். வாழ்க்கையில், எடுத்த எல்லா செயல்களிலும், செய்யும் எல்லா முறைகளிலும் வெற்றியே கிட்டும் என்று நினைத்திருப்பது முட்டாள்தனமானது. அவ்வப்போது சறுக்கல்கள் நேரலாம், தடைகள் வரலாம். சிறிது வந்த பாதையில் பின்வாங்கி, ஆராய்ந்து மாற்றுப் பாதையை தேர்வு செய்து சென்றால் தான், நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அதை விடுத்து நான் திரும்பமாட்டேன் என்று வீராப்பு பேசினால், அங்கேயே முட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.


தொடர்ந்து ஓடுங்கள் – வளைந்துகொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்


வாழ்க்கையில் ஓடவேண்டும். மராத்தான் ஓட்டம் போல் தொடர்ந்து ஓட வேண்டும். ஆனால் எல்லா சமயத்திலும் முன்னேறித்தான் செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை. அவ்வப்போது ஏற்படும் தடைகளுக்கு ஏற்ப, நமது பாதையை மாற்றியமைக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பெரிய குழப்பங்கள் நிறைந்த சிக்கலறை விளையாட்டுப் போன்றது. எண்ணற்ற பாதைகளும், வாய்ப்புக்களும், நம் முன்னே இருக்கும். எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற முழுமையான தெளிவு இல்லாத போது, எதில் பயணித்தாலும், அதன் அனுபவங்களை மனதில் கொண்டு, தேவைப்படும்போது பாதைகளை மாற்றி, இலக்கை அடைவது அறிவின் வெளிப்பாடாகும்.


தொடர்ந்து ஓடுங்கள். மராத்தான் ஓட்டம் என்று எண்ணிக் கொண்டு ஓடுங்கள். ஆனால் முன்னேறுவதில் மட்டுமே வெற்றி இருந்து விடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமயத்தில் பின்வாங்கி பிறகு முன்னேற வேண்டும். வாழ்க்கை ஓட்டத்தில், சிக்கலறை விளையாட்டை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கை என்றைக்குமே எண்ணற்ற சிக்கல்களும், குழப்பங்களும் நிறைந்த ஒரு பாதைதான். அதில் போகப்போகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு சரி செய்ய முடியும். கட்டாயம் சிக்கலறையிலிருந்து வெற்றி பெற்று வெளியேறிவிடலாம். அதற்கு முயற்சியுடன் கூடிய சமயோசித திறமையும், காலநேரம் பார்த்து பாதையை மாற்றியமைக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.


படிப்பினைகளை மறந்துவிடாதீர்கள்


இந்த சிக்கலறை விளையாட்டில், சென்று திரும்பிய பாதைகளை மட்டும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் தான் உங்களை மீண்டும் அந்தத் தவறான பாதையை தவிர்க்க பேருதவியாக இருக்கும். தவறான வட்டத்தில் சிக்கும் நிலையில், கவனத்துடன் போதிய தூரம் பின்வாங்கி மாற்றுப் பாதையை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.


ஆம் வாழ்க்கையில் மாரத்தான் ஓட்டம் போல ஓட வேண்டியது அவசியமாக இருந்தாலும், இடையே வரும் சிக்கல்களுக்கு ஏற்ப, அனுபவங்களைக் கொண்டு பாதையை மாற்றி வெற்றியைத் சுவையுங்கள்.



- [ம.சு.கு. 30-03-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page