top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : யோசனைகள் பலவிதம் - தலைவன் எந்த விதம்?

லோசனைக் கூட்டம்


ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனை குறித்தான மாதாந்திர கூட்டம் வழக்கம்போல் நடைபெறுகிறது. கூட்டத்தின் தொடக்கத்தில், சென்ற மாதத்தின் விற்பனை குறித்து அதன் மேலாளர் விவரிக்கிறார். அடுத்தமாதம் விற்பனையை இரட்டிப்பாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதை எப்படி செய்வது என்று ஒரு பெரிய பட்டியலை தெரிவிக்கிறார். தனது 20 நிமிட விளக்கத்திற்குப் பின், தன் அணியினரிடம் விற்பனையை அதிகரிக்க ஒவ்வொருவரையும் அவர்களுடைய ஆலோசனை வழங்குமாறு கூறுகிறார். (அவர் சென்ற மாதம் வேளாண்மை பயிற்சி வகுப்பு சென்றபோது அங்கு குழுவின் ஆலோசனை கேட்பது, குழுவின் ஒன்றுபட்ட இயக்கத்திற்கு நல்லது என்று கூறியதை நினைவில் வைத்து தன் குழுவினரிடம் ஆலோசனை கேட்கிறார்).சற்று சிந்தனைக்குப் பிறகு, ஒரு பெண் ஊழியர் ஒரு புதிய வகையான முயற்சியைக் கையாளலாம் என்று புதிய யோசனை தெரிவிக்கிறார்.


அந்த பெண் ஊழியர் நிறுவன விற்பனைப்பிரிவில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர். அவர் கூறியது அந்த மேலாளர் பட்டியலிட்ட செயல்முறைகளுக்கு மாற்றாக இருந்தது, அந்த மாறுபட்ட யோசனையை அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. ஆதலால் நீ சொல்வது தவறு, உனக்கு அனுபவம் போதாது, இந்த யோசனை சரிபட்டுவராது என்று எதிர்மறையாகப் பேசி அவரை அமரச் செய்து விடுகிறார். உண்மையில் அது மாறுபட்ட சிறந்த யோசனையாக எல்லோருக்கும் தெரிந்தாலும், யாரும் தங்களின் மேலதிகாரியின் முன் வாய் திறக்கவில்லை. அந்த புதிய பெண்ணுக்கு சற்றே அவமானமாக போனது.


எல்லோரும் வாய்மூடி விடுகின்றனர்


இந்தப் பெண்ணுக்கு நேர்ந்ததே நமக்கும் நேரம் என்று அவர்கள் அறிந்திருந்ததால், யாரும் வாய் திறக்கவில்லை. பின் அந்த மேலாளர், தனது நம்பிக்கைக்குரிய ஊழியர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கேட்கிறார். யாரும் புதியதாக எதையும் சொல்வதில்லை. மாறாக மேலாளர் சொன்ன முறையே சிறந்தது என்று வழிமொழிந்தனர்.


அவர் எல்லோரிடமும் தனித்தனியே யோசனைகளை கேட்டதால், ஓரிருவர் சற்றே தைரியத்துடன், சில ஆலோசனைகளை சொன்னாலும், அவர் அதனையும் ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி ஒதுக்கினார். புதிய யோசனைகளை மேலாளர் வாயளவில் மட்டுமே கேட்டடுள்ளார். ஆனால் மனதளவில் எதையும் ஏற்க அவர் தயாராக இல்லை.


ஓரிரு யோசனைகளைச் சொன்னவர்களுக்கும் மூக்கறுபட்டதால், மற்றவர்கள் எல்லாம் வெறுமனே ஒதுங்கி விட்டனர். இப்போது அந்த மாதம் விற்பனை மேலாளர் குறிப்பிட்ட முறைகளின்படி நடக்கிறது. பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. எந்த ஒரு ஊழியரும், அவருடைய ஆலோசனையில் உள்ள குளறுபடிகளை அவரிடம் சென்று சொல்ல தயாராக இல்லை. அடுத்த மாத கூட்டத்திலும் இதே கதைதான். விற்பனை அதிகரிப்பதில்லை. பேச்சு சுதந்திரம் இருப்பதுபோன்ற மேலோட்டமான ஒரு பாவனை இருந்தாலும், அதுவும் ஒரு சர்வாதிகாரியின் கட்டுப்பட்ட சுதந்திரம் என்பதை உணர்ந்த ஊழியர்கள், தனக்குப் எதற்கு பிரச்சினை என்று ஒதுங்கிக் கொள்ள துவங்கிவிட்டனர்.


இயந்திரத்தனம்


மேலாளர் எதைச் சொல்கிறாரோ, அதை மட்டும் செய்கிறார்கள். தாங்களாக ஒரு உத்வேகத்துடன் எதையும் புதுமையாக செய்ததில்லை. எந்த ஒரு புதிய ஆலேசனையும் ஏற்கப்படுவதில்லை என்பதால், யாரும் எதையும் சொல்வதுமில்லை. விளைவு, படிப்படியாக விற்பனை குறையத் தொடங்கியது. ஊழியர்களுக்கு முன்னர் இருந்த தன்முனைப்பும், உத்வேகமும் முற்றிலும் மறைந்து போய், சொல்வதை செய்கிறோம் என்கிற நிலை. இப்படி இருந்தால் வியாபாரம் எப்படி உருப்படுவது?


என்னதான் நேர்ந்தது


ஊழியர்களின் ஆலோசனையை கேட்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் அவர்கள் சொல்வதை, எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்த்து அதற்கு உடனுக்குடன் எதிர்வாதம் தெரிவித்தால், அந்த ஊழியரின் உத்வேகம் அப்படியே அடிவாங்குகிறது. சில தருணங்களில் அவர்கள் அவமானப்படுத்தப்படும் வீதம் நடத்தப்பட்டால், அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஒதுங்கி விடுகின்றனர். புதியதாக எந்த ஒரு ஆலோசனையையும் தெரிவிக்க முன்வருவதில்லை.


எல்லா ஊழியர்களும், காலை 9 மணிக்கு வந்தோம், மேலாளர் சொல்வதை முடிந்தவரை செய்தோம். மாலை 5 மணிக்கு கிளம்பினோம் என்று மாறிவிடுகின்றனர்.


தலைவன் ஆலோசனைகள் கேட்கும்போது ஒருவேளை அந்த ஊழியரின் ஆலோசனைகள் சற்றே முட்டாள்தனமாக இருந்தாலும், நேருக்குநேர் அதே தருணத்தில் அவரையும் அவரது யோசனையின் குறை கூறினால், அவர்களின் தன்னம்பிக்கையும், உத்வேகமும் முற்றிலும் பாதிக்கிறது. அதை தொடர்ந்து அவர்கள் செய்யப்போகும் வேலையில் கவனம் குறைந்து விடும்.


தன்னுடைய திட்டப்படி தான் எல்லோரும் நடக்க வேண்டும் என்று எண்ணும் மேலாளர், இப்படி ஆலோசனைகளை கேட்டு அவமானப்படுத்துவதற்கு பதிலாக, ஆலோசனைகளை கேட்காமல் சர்வாதிகாரியாக செய்யச் சொல்லியிருந்தால் கூட, ஓரளவுக்கு ஊழியர்கள் செய்திருக்கக்கூடும். அவர்கள் தேவையில்லாமல் நிராகரிக்கப்பட்டதாலும், அவமானப்படுத்தப்பட்டதாலும், அவர்கள் தனிப்பட்ட உத்வேகமும் முற்றிலும் சிதைந்து விடுகிறது.


என்ன செய்யலாம்


ஒரு குழுவாக இயங்கும் இடத்தில், நீங்கள் தலைவராக இருந்தால் இவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:

  • கூடியவரை உங்கள் முடிவுகளை முதலில் தெரிவிக்க வேண்டும்

  • எல்லோருடைய யோசனைகளையும் நம்பிக்கையுடன் கேளுங்கள். உடனுக்குடன் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவசரம் இல்லை. உங்கள் முடிவை சொல்ல ஒரு நாள் அவகாசம் தேவை என்று சொல்லலாம்.

  • கடைசியாக உங்களின் யோசனையை தெரிவிக்கும்போது, நீங்கள் மற்றவர்களின் யோசனைகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், நீங்கள் ஏன் உங்களின் இந்த யோசனைக்கு வந்தீர்கள், அதன் சாதக பாதகங்கள் என்ன என்று தெளிவாக உரைத்தால், மற்ற யோசனைகள் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலை மற்ற ஊழியர்கள் புரிந்து கொண்டு தங்களின் யோசனைகள் ஏற்கப்படாததற்கான காரணத்தையும் உணர்ந்து ஏற்றுக்கொள்வார்கள்.

  • ஊழியர்களை நேரடியாக எந்தத் தருணத்திலும் தாக்கி பேசலாகாது. அது அவர்களின் உத்வேகத்தையும், நிறுவனத்தின் மீதான மதிப்பையும் குறைத்து விடும்.

  • தொடர்ந்து எல்லோரின் யோசனைகளையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் கேளுங்கள். அவற்றைக் கட்டாயம் ஆலோசித்து முடிவு எடுப்பதாக அவர்களுக்கு உறுதி கூறுங்கள். கனிவான பதில் பல முரண்பாடுகளை உடனுக்குடன் சரி செய்யும்.

யோசனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எதை ஏற்பது, எதை பிறர் மனம் புண்படாமல் நிராகரிப்பது, எதை துரிதப்படுத்துவது என்பதை தலைமையில் இருப்பவர்கள் மிகவும் சாதுர்யமாக கையாள வேண்டும்.

  • ஒரு சில சமயங்களில் சில முட்டாள்தனமான யோசனையைக்கூட ஊழியரின் நம்பிக்கைக்காக செய்வதுபோல பாவலாவேனும் காட்டவேண்டும்.

  • சில யோசனைகள் தோல்வியில் முடிந்தாலும், ஊழியரை அதிகம் கடிந்து கொள்ளக்கூடாது.

ஒரு நிறுவனம் வெற்றிபெற அதன் ஊழியர்களின் முழுஈடுபாடு அதிமுக்கியம். அவர்கள் ஊதியத்திற்காக வேலைக்கு வந்தாலும், இது தங்களுடைய நிறுவனம் என்கின்ற நினைப்பில் செயல்படும் வண்ணம் அவர்களுக்கும் நிறுவனத்திற்குமான ஒரு பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். எவரொருவர், தன் குழுவினரை, அவரவர்களின் செயலுக்கு முழுமனதுடன் அவர்களே பொருப்பேற்கும் படி செய்கிறாரோ, அவரால் மட்டுமே அந்த குழுவை வெற்றிப்பாதையில் எளிதாக கொண்டு செல்ல இயலும்.


மறந்துவிடாதீர்கள்


தலைவனின் வெற்றி – குழுவின் செயல்பாட்டில்;

குழுவின் வெற்றி – தலைவனின் செயல்பாட்டில்;

ஒன்றைச் சார்ந்து மற்றொன்று

எல்லோரையும் ஏற்று அரவனைக்க வேண்டும்;

மாற்றுக் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்;

புதியதொரு விதிசமைக்க

குழுவை ஆக்கப்பூர்வமாக வழிநடத்தவேண்டும்;


-[ம.சு.கு – 26.02.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page