“பிறர் பொருளுக்கு ஆசைப்படுதலும் குற்றமே;
பிறர் பொருள் கண்டு பொறாமை கொள்தலும் குற்றமே;”
பொறாமை குணம்
நம் எல்லோரிடத்திலும் பொதுவாக காணப்படும் பல்வேறுபட்ட குணாதியங்களில், பொறாமை குணமும் முக்கியமான ஒன்று. இந்த பொறாமை குணத்தால் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், பொறாமைத்தீயில் பொசுங்கியவர்கள் ஏராளம்.
நம் உறவுகளின் மீது பொறாமை
பிறர் செல்வத்தின் மீது பொறாமை
பிறர் பதவிகளில் மீது பொறாமை
பிறர் வெற்றியின் மீது பொறாமை
பிறர் புகழின் மீது பொறாமை
பொதுவாக பொறாமை மூன்று வகைகளாக பிரிக்கலாம்
தன்னிடம் இல்லாத பொருள் அடுத்தவரிடம் இருந்தால் அதை கண்டு பொறாமை
தன்னிடம் அந்தப் பொருள் இருந்தாலும், அடுத்தவர் பொருள் சிறப்பாக இருப்பது குறித்து பொறாமை
தான் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று ஆணவத்துடன், அதை உடைய பிறர் மீது பொறாமை
இந்த பொறாமை குணமானது, பொருள் சார்ந்து மட்டும் நின்றுவிடுவதில்லை. மனித உறவுகளுக்குள்ளும் எண்ணற்ற வகைகளில் குடிகொண்டு வாழ்க்கையை சீரழிக்கிறது.
பொறாமை – ஒரு மனநோய்
வாழ்விலே பொறாமை என்பது ஒரு மிகக்கொடிய மனநோய். பிறர் பொருளைக் கண்டு பொறாமை கொள்ளத் துவங்கிவிட்டால், அந்த பொறாமை எண்ணங்களுக்கு எல்லையே இருக்காது. ஏதேனும் காரணத்திற்காக, ஒரு விடயத்தின் மேல், ஒரு பொருளின் மேல், ஒருநபரின் மேல் தொடங்கும் இந்த பொறாமை எண்ணம், அடுத்தடுத்து பலவற்றின் மீது வளர்ந்து கொண்டே போகும். இப்படி வளரும் பொறாமைக் குணம் நம்முள் எண்ணற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
பொறாமையினால் ஏற்படக்கூடிய விளைவுகள்:
மன அழுத்தம் அதிகரித்து மன நிம்மதி தொலைந்துவிடும்
மன அழுத்தத்தின் காரணமாக படிப்படியாக உடல் நலம் பாதிக்கும்
ஆதீத பொறாமை தீய எண்ணங்களுக்கும், தீய செயல்களுக்கும் அது வழிவகுக்கும்
எல்லாவற்றிலும் எதிர்மறையான கண்ணோட்டத்தை வளர்க்கும்
பிறருடைய தோல்வி / வலிகளை கண்டு, உள்ளூர மனம் மகிழக்கூடிய கொடிய மனநோய் பெரிதாகும்
தேவையற்ற விடயங்களுக்கு எரிச்சல், கோபம் போன்ற தவறான குணங்கள் அதிகரிக்கும்
தங்கள் மீதான தன்னம்பிக்கை படிப்படியாக குறைந்தது, தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.
நம்முள் தோன்றும் இந்த பொறாமையை, மேலும் அதிகப்படுத்தி ஆதாயம் காண, சில புள்ளுருவிகள் நம்மையே சுற்றி வந்து, நம் வீழ்ச்சிக்கு வழிவகுப்பார்கள்.
எதன் மீது இந்த பொறாமை
பொறாமை என்பது கொடிய குணமென்று சொல்லுகிறோம். அப்படிப்பட்ட இந்த பொறாமை எதனால்? எங்கிருந்து? துவங்குகிறது:
ஒருவரை யாரும் கண்டு கொள்ளாவிட்டால், அவரின் தனிமை, அவரை சமுதாயத்தால் ஒதுக்கப்படுவதாக யோசிக்கவைத்து, பிறர் மீது பொறாமை வளர வழிவகுத்துவிடுகிறது.
உறவுகள், நண்பர்கள், சுற்றத்தாரிடையே தகவல் பரிமாற்றங்கள் சரியாக நடக்காத பட்சத்தில், நடந்த / நடக்கும் நிகழ்வுகள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பொறாமை உருவாகலாம்.
தன் மீதான நம்பிக்கை குறையும் போது, தனக்கு சமமான, அல்லது தன்னைவிட கீழிலிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் நபரின் வளர்ச்சியும், வெற்றியும், அவர் மீது அதீத பொறாமையாக மாறிவிடலாம்.
தனக்கான பாதுகாப்பின்மையை உணரும்போது, பிறர் மீது பொறாமையும் வெறுப்பும் உருவாகலாம்
கடுமையான போட்டிகள் நிகழும் இடங்களில், ஒரு சிலருக்கும் மட்டும் ஆதரவுகள் அதிகமாக இருப்பது இயல்பு. தனக்கு உரிய ஆதரவு இல்லாதபோது, பிற போட்டியளர்கள் மீது பொறாமை உருவாகலாம்;
சிறு பிள்ளைகள், தங்கள் உடன்பிறந்த சகோதர-சகோதரிகளிடமும், உடன் பயிலும் மாணவர்கள் மீதும், அவர்களிடம் உள்ள / அவர்களுக்கும் கிடைக்கும் பொருள், பாராட்டுக்களை கண்டு பொறாமை கொள்ளலாம்
இப்படி எண்ணற்ற வகைகளில், பலதரப்பட்ட சூழ்நிலைகளில் ஒருநபர் மீது மற்றவருக்கு பொறாமை உருவாகிறது. என்ன தான் செல்வம், உறவு, பதவி, புகழ் போன்ற காரணங்களுக்காக பொறாமை உருவானாலும், அவை எல்லாமே ஒருநபரை நோக்கியே மையம் கொள்கிறது. அப்படி ஒருநபரை குறிவைத்து உருவாகும் இந்த பொறாமை எண்ணம், உரிய நேரத்தில் புரிந்துணர்ந்து கட்டுப்படுத்தப்படாவிட்டால் அந்த பொறாமை கொள்ளும் நபர் சில தீய எண்ணங்களுக்கு உட்பட்டு, மற்றவர் மீது தீமைகளை கட்டவிழ்க்க வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் ஒருவரின் பொறாமை குணத்தைப் தெரிந்து கொண்ட சில நபர்கள், அதை தங்களின் சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, அவர்களின் பொறாமைத்தீயை மேலும் வளர்க்க தேவையற்ற வதந்திகளையும், இல்லாத அனுமானங்களையும் கூறி அவரை மேலும் தூண்டிவிடுகின்றனர்.
இந்த பொறாமையை தவிர்ப்பது / குறைப்பது எப்படி?
யாரும், பொறாமை குணத்தை ஆசைப்பட்டு வளர்த்துக் கொள்வதில்லை. அது எல்லோருடைய வாழ்விலும், பல்வேறு பட்ட தருணங்களில் வெவ்வேறு விதங்களில் வந்து போகின்றன. யாரொருவர் தன்னுள் பொறாமை வந்திருக்கிறது என்று உணர்ந்து அதை ஆரம்பத்திலேயே தவிர்க்க முயற்சிக்கிறாரோ, அவரால் மட்டுமே அந்த பொறாமைத் தீயில் இருந்து தப்பித்து ஆக்கத்தை நோக்கி முன்னேற முடியும். அதை விடுத்து அந்த பொறாமைத் தீயில் சேர்ந்து முழங்கினால் தான் அழிவதோடல்லாமல், தன்னை சேர்ந்தவர்களும் அழிவதற்கான வாய்ப்பாகி விடும். இப்படி அழிவிற்கு வழிவகுக்கும் பொறாமையை என்ன செய்தால் குறைக்க / தவிர்க்க முடியும்;
ஏதேனும் காரணங்களினால் நம்முள் பொறாமை வருகின்ற பட்சத்தில், அந்த குறிப்பிட்ட நபர் நமக்கு செய்த நன்மைகளை, அவரால் நமக்கு கிடைத்த பயன்களை ஒருமுறை சிந்தித்துப் பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
ஒருவேளை மற்றவர்களிடம் இருக்கும் அளவு வசதி வாய்ப்புகள் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு இறைவன் வழங்கிய இந்த வளமைக்கு நன்றி சொல்லி, அதைவிட ஒருபடி அதிகமாக நீங்கள் வளர்ச்சிக்கான, போதிய வல்லமை பெற இறைவனை பிரார்த்தியுங்கள்.
நம்முடைய சக குடும்ப உறுப்பினர், சக நண்பர், நல்ல நிலைக்கு வருவது கண்டு உளமார மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஒருவேளை, நாம் பெருங்கஷ்டத்தில் இருந்தாலும், குறைந்தபட்சம் அவர்களாவது மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்று பெருந்தன்மையுடன் வாழ்த்துங்கள்.
அடுத்தவர்க்கு மட்டும் கிடைத்துவிட்டதே என்று சிந்திக்காமல், நமக்கு கிடைக்க ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய வேண்டுமென்று யோசியுங்கள். வென்றவரிடம் பகைமை பாராட்டாமல், அவரது வெற்றிக்கான காரணத்தை கலந்துரையாடி தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது, கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை மனிதநேயம் பேணுதல்; ஏனையவைகளைப் பற்றி கவலை தேவையில்லை. எல்லாமே இந்த மூன்றிற்குள் கட்டுப்பட்டுவிடும்;
உங்கள் கடமைகளை சரிவர செய்து வாருங்கள் உங்களுக்கான வெற்றியும் புகழும் தானாக உங்களை வந்தடையும்.
சக மனிதர்களுடனான நட்பை, உறவைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள். உங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்;
எந்தவொரு உறவிலும், எந்த தொடர்பிலும் நீங்கள் உண்மையானவராகவும், நம்பிக்கையானவராகவும் இருங்கள்;
உங்கள் குடும்பம், உங்களைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தின் வெற்றியில் வளர்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்;
ஆக்கத்தை நோக்கி முன்னேறுங்கள்
பொறாமை என்பது எல்லோருக்கும் பொதுவான குணமாக இருந்தாலும், நடைமுறையில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் யாரும், பிறர் வெற்றியில் பொறாமை கொள்வதில்லை. அவர்கள் பொறாமையினால் மனம்வெதும்பி காலத்தை வீண்டிப்பது பயன்ற்றதென்று அவர்கள் அறிந்துகொண்டுள்ளார்கள். தன்னுடைய வெற்றிக்கு கடுமையாக உழைக்கிறவர்களுக்கு, மற்றவர்கள் மீது பொறாமை வளர்க்க நேரமிருப்பதில்லை. அவர்கள் தன்னைச்சுற்றியுள்ள பிற வெற்றியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
பொறாமை தவிர்க்க முடியாத குணம். அது நம்முள் வேரூன்றி வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிறர் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிறர் மகிழ்ச்சியிலும், வேதனையிலும் உளமார பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறர் வெற்றி தோல்விகளை விமர்சிக்காதீர்கள். அவர்களின் வளர்ச்சி வீழ்ச்சிக்கான காரணங்களை புரிந்துகொண்டு உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள்;
பிறர் செல்வமும், புகழும், வெற்றியும் உங்களுக்கு பொறாமை தராமல் உங்களுக்குள் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டட்டும் [மற்றவர்களால் செய்யமுடியும் போது, உங்களாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு முன்னேறுங்கள்];
நம்பிக்கையோடு போராடி வென்றால், அன்று உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். அன்றைய தினம் இந்தப் பாடத்தை அவர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம்.
வாழ்வில் எழுதப்படாத விதி
உங்களுக்கு உரியது உங்களிடம் வந்தே தீரும்;
உங்களுக்கு அல்லாதது உங்களை விட்டு கட்டாயம் விலகியே தீரும்;
- [ம.சு.கு 30-07-2022]
Comments