“ஏன் அய்யா, என்மீது மோதினீர்கள்?”
“மன்னிக்கவும்! நீங்கள் வருவதை நான் கவனிக்கவில்லை!”
“எப்படி இந்த விபத்து நேர்ந்தது?”
“சாலையில் வேகத்தடை இருந்ததை சற்று கவனிக்கவில்லை”
“நீங்கள் வரும் பாதையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்ததே! ஏன் இங்கு வந்தீர்கள்?”
“அறிவிப்பை சரியாக கவனிக்கவில்லை”
“கவனிக்கவில்லை”,
“கவனிக்கவில்லை”,
“கவனிக்கவில்லை”
உலகில் நடக்கும் ஆயிரம் விபத்துக்களுக்கும், இழப்புகளுக்கும் காலங்காலமாய் கூறப்படும் பொதுவான ஒரே பதில் - கவனிக்கவில்லை !!
கவனக்குறைவு சாதாரணமாகிவிட்டது
இந்த கவனமின்மை / கவனச்சிதறல்களால் தான், எண்ணற்ற இழப்புகள் நேர்கின்றன என்று எல்லா மனிதர்களுக்கும் நன்றாக தெரியும். ஆனால், தெரிந்தும் இந்த நிலை ஏன் தொடர்கிறது?
சாலை விபத்துக்கள்
- கவனச் சிதறலால்
குடும்பச் சண்டைகள்
- கவனச்சிதறலான செயல்கள் மட்டும் கட்டுப்பாடற்ற வார்த்தைகளால்
தேர்வில் தோல்வி
- படிப்பில் ஏற்படும் கவனச்சிதறல் {கைபேசியில் நேரம் கழித்ததால்}
வேலை இழப்பு
- கவனச் சிதறலால் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்துதல்
இப்படி எத்தனையெத்தனை இழப்புக்கள் அன்றாடம். அப்பப்பா – நினைத்தாலே பயத்தை ஏற்படுத்துகிறது.
சிலசமயங்களில், ஒரு தனிமனிதனின் அலட்சியம் / கவனமின்மை, சம்பந்தமேயில்லாத சில குடும்பங்களை சீர்குலைத்துள்ளதைப் பார்த்தால், நமக்கே இரத்தம் கொதிக்கும். அந்த அலட்சியமான செயலைச் செய்தவரை அடிக்கத் தோன்றும். அந்த அளவிற்கு சமுதாயத்தில் பொறுப்பற்ற நிலை ஒருபுறமிருப்பது மிகவும் வேதனை தரக்கூடிய விடயம்.
அதிர்ஷ்டத்தில் வெற்றி
யாரேனும் கவனச்சிதறலால் ஜெயித்தேன் என்று சொல்லியிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? சில சமயம் ஏதோ தெரியாமல் செய்த செயல்களால் வெற்றிகிட்டும். ஆனால் அதை அதிர்ஷ்டத்தால் கிடைத்ததென்று ஒத்துக்கொள்பவர்கள் குறைவு. மாறாய், தான் திட்டமிட்டு அவ்வாறு செய்து வெற்றிபெற்றதாக தம்பட்டம் அடிப்பவர்கள் தான் அதிகம். மக்களுக்கு தற்புகழ்ச்சியிலும், கௌரவத்திலும் அதீத ஆசை.
வென்றால் தன் திறமையால் வென்றதாக மாற்றி தம்பட்டமடிப்பது. தவறு நேர்ந்துவிட்டால், கவனிக்காமல் நிகழ்ந்துவிட்டதாக சாக்கீடு சொல்லி தப்பிக்க முயற்சிப்பது.
ஏன் இந்தக் கவனச்சிதறல்கள்?
செய்யும் காரியத்தில் நாட்டமின்மை, ஆதலால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேறு விடயங்களில் கவனத்தை திசைதிருப்பிக்கொள்வது.
தேவையில்லாத, முக்கியமற்றவற்றில் அதிக கவனம் செலுத்துவது {கைப்பேசி, சமூகவளைதளம்....}
தீய பழக்கங்கள் {மது, மாது, தீயவர் சேர்க்கை,...................}
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பேராசை குணம்;
கவனச்சிதறல்களுக்கான காரணங்களை பட்டியலிட தொடங்கினால், பட்டியல் கிலோமீட்டர் கணக்கில் நீண்டு கொண்டே போகும். இழப்பை சந்தித்த ஒவ்வொருவரும் கூறுவர், தங்களின் கவனச் சிதறலால் - என்ன இழப்பு நேர்ந்ததென்று.
ஆசிரியர் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் சாதாரனமாய் விட்டுவிடுகின்றனர். பின்னர் தாங்களாக படித்து அதை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, விளைவு - தேர்வில் தோல்வி உறுதியாகிறது. இப்படி நாம் சிறியவை என நினைக்கும் பல கவனச்சிதறல்கள் தான், மிகப்பெரிய இழப்புக்களை தந்துள்ளன. சில நேரங்களில் விலைமதிப்பில்லா உயிர்களையும் பறித்துள்ளன என்பது இன்னும் வேதனையளிக்ககூடிய நிதர்சனம்.
மின்சார உபகரணம் சரி செய்து கொண்டிருந்த தந்தை, யாரோ அழைத்தார் என்று அப்படியே விட்டுவிட்டு வீட்டின் வெளிப்புறம் வந்த நேரத்தில், அவர் குழந்தை அதைத் தொட்டு மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது;
வீட்டில் நிலத்தடி நீர் தொட்டி கதவை மூட மறந்ததால், குழந்தை விளையாடும்போது அதில் தவறிவிழுந்து மூச்சுத்திணறி இறந்துள்ளது;
சாலையைக் கடக்கும் போது தொலைபேசி அழைப்பு வரவே, அதை ஒரு விநாடி கவனித்ததில், சாலையில் கவனம் தவறி பெரும்விபத்து நேர்கிறது;
இப்படி எண்ணற்ற நிகழ்வுகள். பல்வேறுபட்ட காலச்சூழ்நிலைகளில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவனச் சிதறல்கள். ஒரு தனிமனிதனின் சிறு கவனச்சிதறல், அவனுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி நின்றுவிடுவதில்லை. பல சாலைவிபத்துக்கள், சம்பந்தமே இல்லாத பல குடும்பங்களை வீதிக்கு கொண்டுவந்துவிட்டது என்பதை பார்க்கும் போது, இந்த அலட்சியப்போக்கான மனிதர்களை ஏன் தூக்கிலிடக்கூடாதென? தோன்றுகிறது. ஆனால், இறைவனின் படைப்பை அழிக்க யாருக்கும் உரிமையில்லையென்றாலும், கவனச்சிதறல்களால் இழப்பு நேரிடும் என்று தெரிந்த சமுதாயம், திரும்பத்திரும்ப அந்த தவறைச் செய்து சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் கண்டால், நெஞ்சு பொறுப்பதில்லை!
எப்படி இந்த கவனச்சிதறலைத் தடுப்பது?
கவனச் சிதறல்கள் பலவிதம். எல்லாவற்றுக்கும் ஒரே வகையான தீர்வு இருக்காது. ஒவ்வொரு வகையான கவனச்சிதறல்களுக்கும், அந்த நபர் இருக்கும் காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியாக கையாண்டால் தான், பாதிப்புகள் ஏதும் நிகழாமல் தப்பிக்க முடியும்.
தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது, அருகில் கைபேசியை வைத்துக் கொண்டு அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிலளித்துக் கொண்டிருந்தால், பாடத்தில் கவனம் எப்படியிருக்கும்? பாடத்தில் முழுஈடுபாடு இல்லாவிட்டால், அந்தப்பாடம் எப்படி மனதில் பதியும்? {இங்கு கைப்பேசியும், சமூக வலைதளங்களும் மிகப்பெரிய கவனச்சிதறல்கள். அந்தக் காரணிகளை புரிந்து, அவற்றை முற்றிலும் தூரமாக வைத்துவிட்டு படிக்க உட்கார்ந்தால் வெற்றிகிட்டும்}
வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது, கைபேசியில் அழைப்பு வந்தால் வாகனத்தை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு பேசவேண்டும். ஒருகையில் கைபேசியில் பேசிக்கொண்டே மற்றொரு கையில் வாகனம் ஓட்டினால், விபத்துக்கள் நேர வாய்ப்பு அதிகரிக்கும். இங்கு, அந்த கைப்பேசி கவனச்சிதறல் அல்ல - அதை அப்போதைக்கும் கையாளும் முறைதான், சாலையில் கவனத்தைக்குறைத்து விபத்திற்கு வழிவகுக்கிறது. கைப்பேசியைக் குற்றம் சொல்லிப்பயனில்லை. நமது அணுகுமுறை மாறவேண்டும்.
100-மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓட தயாராக இருக்கிறீர்கள். அவ்விடத்தில், நிலவும் முழுச்சூழ்நிலையுமே உங்களுக்கு கவனச்சிதறல் தான். சுற்றியுள்ளவைகள், சுற்றியுள்ள போட்டியாளர்கள் என்று எதையும் கவனிக்காமல், முழுக்கவனமும் தொடக்கத்திற்கான துப்பாக்கி ஒலியையும், அடையவேண்டிய இலக்கையும் மட்டுமே நோக்கி இருக்க வேண்டும். அந்தக்கணம் பெரிய பூகம்பமே வந்தாலும், கவனிக்காமல் ஒடும்தடத்தில் கவனத்தைச் செலுத்தி ஓடினால்தான், வெற்றி கிடைக்கும். கூட்டத்தினரின் ஆரவாரத்தையும், வர்ணனையாளரின் வார்த்தைகளுக்கும், சக போட்டியளரின் சீன்டல்களுக்கும் செவி சாய்த்தால், வெற்றி தவறிப்போகும்;
சில தருணங்களில், இந்த கவனச் சிதறல்களும் நமக்கு நன்மை அளிக்கக்கூடும். உண்மையில் அவை கவனச்சிதறலல்ல, நாமே விழிப்புடன் நம் கவனத்தை திசைதிருப்பிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் வந்துபோகலாம். ஏதேனும் இழப்பினால் மனஉளைச்சல், மனவேதனையில் உழன்றுகொண்டிருக்கும் சூழ்நிலைகளில், அந்த வேதனையான விடயங்களைப் பற்றியே அதிகம் சிந்தித்து வேதனையை அதிகரிக்காமல் இருப்பதற்கு, உங்களின் கவனத்தை வேறு விடயங்களில் பக்கம் திருப்பினால், சற்று மன நிம்மதி கிடைக்கும்.
கவனச் சிதறல்களை தவிர்ப்பதற்க்கென்று தனி மருந்து ஏதுமில்லை. நம்முடைய முழுமையான விழிப்புதான் அதற்கான ஒரே மருந்து. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும், அதன் மீதான உங்களின் விழிப்பை தொடர்ந்து கவனித்து வாருங்கள், படிப்படியாய் எல்லாம் சரியாகும்.
சில சமயங்களில் ஒன்றையே திருப்பத்திரும்ப செய்து கொண்டிருந்தால் சலிப்பு தோன்றலாம். இந்த சலிப்புதான் கவனச்சிதறலுக்கான ஆரம்பப்புள்ளி. அப்படி சலிப்பு ஏற்படும் நேரங்களில் கவனச்சிதறலைத் தவிர்க்க, சிறிது நேரம் ஓய்வெடுங்கள்;
எவையெல்லாம் உங்களின் கவனச் சிதறல்கள் என்று பட்டியலிட்டு, அவற்றிலிருந்து எப்படி நிரந்தரமாக விலகி இருப்பதென்று திட்டமிடுங்கள்;
கவனச் சிதறல்களை, உங்களின் முழுமையான முயற்சிகளால் தான் வெல்ல முடியும். மேலும், அது தொடர்ந்து வென்று கொண்டே இருக்கப்பட வேண்டிய ஒன்று. இன்றையதினம் கவனச்சிதறல் ஏதுமின்றி எல்லாவற்றையும் திறம்பட செய்துமுடித்துவிட்டேன் என்று ஓய்வுகொள்ள முடியாது. நாளை திரும்பவும் பலவற்றை செய்ய வேண்டும். நாளை, அடுத்த வாரம், அடுத்த வருடமென்று பலப்பல செயல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் போது, நீங்கள் கவனச்சிதறல்களை வெல்வதில் இன்னும் அதிக கவனம் தேவைப்படும். ஏனெனில், தொடர்ந்து செய்யும் போதுதான் அதிக சலிப்பும், கவனச்சிதறலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
நம் வெற்றிக்கு சோம்பேறித்தனம் எப்படி மிகப்பெரிய எதிரியோ, அதற்கு இனையாக இந்த கவனச்சிதறலும் மிகப்பெரிய எதிரிதான். மிகவும் பாடுபட்டு உருவாக்கி, முடிக்கும் தருவாயில் சிறுதவறுகளால் அந்த உழைப்பு முற்றிலும் பாழ்படுவதைப் பார்த்திருக்கக்கூடும். இந்த கவனச்சிதறல், உங்களையும் அறியாமல் உங்கள் செயல்பாடுகளில் தொற்றிக்கொள்ளக்கூடியது. ‘இதுவொரு அழையா விருந்தாளி’ என்பதை மறந்துவிடாதீர்கள். ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு தருணத்திலும், நீங்கள் விழிப்புடன் இருப்பது மட்டுமே உங்களின் வெற்றிக்கு இருக்கும் ஒரே வழி.
உங்கள் செயல்களை நீங்களே கவனியுங்கள்;
உங்கள் செயல்களை நீங்களே மறுஆய்வு செய்யுங்கள்;
நேர மேலாண்மையை மேம்படுத்துங்கள்;
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்து தேவையான திருத்தங்களை செய்துவந்தால், இந்த கவனச்சிதறல்கள் முற்றிலும் குறைந்துவிடும்.
{குறிப்பு – கவனச்சிதறல் குறைந்துவிடுமே ஒழிய, ஒருபோதும் முற்றிலுமாய் நீக்கிவிடமுடியாது. அது திரும்பவும் எப்படி, எங்கு உங்களை ஆட்கொள்ளும் என்பது தெரியாது – ஆனால் கட்டாயம் ஆட்கொள்ள முயற்சித்துக்கொண்டேயிருக்கும். ஏனெனில், மனிதமனம் எளிதில் சலிப்படையக்கூடியது. அந்த இயல்பான சலிப்பு, உங்கள் விழிப்பு நிலையை குறைத்து கவனத்தை திசைதிருப்பிவிடும்}.
சில சமயங்களில், கவனச்சிதறலைத் தடுக்க உங்கள் புறச்சூழ்நிலைகளை மாற்ற வேண்டிவரும் {அல்லது} அதிலிருந்து விலகியிருக்க வேண்டிவரும். உங்கள் செயல்களுக்கும் - தேவைகளுக்கும் ஏற்ப, உரிய நேரத்தில் உரிய முடிவை எடுத்து செயல்படுத்தி முன்னேறுங்கள்! முடிவெடுக்க தாமதித்து, தயவு செய்து சும்மா இருந்து விடாதீர்கள்!
வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!!
அக்கம் பக்கம் பார்க்காமல்
இலக்கை நோக்கி ஓடினாள்!!
கவனச் சிதறல்கள்
உங்களை முற்றிலும் திசைதிருப்பக்கூடும்;
எப்படி விழிப்புடன் தவிர்ப்பது என்பது சவால்தான்!!
சவால்களை சந்தித்தால்தான்
வெற்றியில் சுவாரசியம் இருக்கும்!
வெற்றியின் சுவையும் அதிகரிக்கும் !
விழிப்புடன் இருங்கள் ! வெற்றி காணுங்கள் !
வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!!
- [ம.சு.கு- 04-05-2022]
Comments